புதுடெல்லி: சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்று விரைவுப் பரிசோதனைக் கருவிகளில் பல துல்லியமான முடிவுகளைத் தருவதில்லை எனப் புகார்கள் எழுந்தன. இருந்தாலும், அந்நாட்டிடம் இருந்து மருத்துவச் சாதனங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த இரு வாரங்களில் சீனாவின் ஐந்து நகரங்களில் இருந்து கிட்டத்தட்ட 24 விமானங்கள் மூலம் 400 டன் அளவிலான விரைவுப் பரிசோதனைக் கருவிகள், வெப்பமானிகள், தனிநபர் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட மருத்துவச் சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
வரும் நாட்களில் அங்கிருந்து மேலும் 20 விமானங்கள் மூலம் மருத்துவச் சாதனங்கள் வரவிருப்பதாகக் கூறிய திரு ஸ்ரீவஸ்தவா, அடுத்த சில மாதங்களில் அது மேலும் அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
விரைவுப் பரிசோதனைக் கருவிகளின் துல்லியமற்ற முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு, "அது குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது," என்றார்.
பாதிப்பு 23,077; பலி 718
இதனிடையே, நேற்று முன்தின நிலவரப்படி இந்தியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,077ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 718ஆகவும் உயர்ந்தது. மகாராஷ்டிரா (6,430), குஜராத் (2,624), டெல்லி (2,376) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

