புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக இவ்வாண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்புவது 23% குறையலாம் என உலக வங்கி கணித்திருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து 83 பில்லியன் அமெரிக்க டாலர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் அது 64 பி. அமெரிக்க டாலராகக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளைப் பொறுத்தமட்டில், வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் முக்கிய வருமான ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது என்று உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனுப்பும் பணத்தை நம்பியே ஏராளமான குடும்பங்கள் உணவு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளைச் சமாளித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
அத்துடன், இவ்வாண்டில் பணம் அனுப்புவது உலகளவிலும் கிட்டத்தட்ட 20% குறையக்கூடும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

