மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இம்மாநிலத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித் தொற்றில் இருந்து 957 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா கிருமி பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.
இக்குடிசைப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கிருமித் தொற்றில் இருந்து மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத் மீண்டுள்ளார்.
அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கிருமித் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் தன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கடந்த 13ஆம் தேதி முதல் தனிமையில் இருந்த அவருக்கு, மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கிருமித்தொற்று ஏதும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் மே 15ஆம் தேதிக்குள் மும்பையில் மட்டும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சமாக அதிகரிக்கக் கூடும் என மத்திய குழு கணித்துள்ளதாக வெளியான தகவல் மும்பைவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மத்திய குழு மாநகராட்சியின் நடவடிக்கைகளைப் பாராட்டி உள்ளது என்றும், கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு திருப்தி அடைந்து உள்ளது என்றும் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நிலவரம்
நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,775ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 775 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 18,668 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத்தில் 2,600 பேர், டெல்லியில் 2,300, ராஜஸ்தானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், உத்தரப் பிரதேசத்தில் 1,621 பேர், ஆந்திரவில் 955 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக குணமடைந்து இருப்பதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

