புதுடெல்லி: இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட துரித சோதனைக் கருவிகள் தரமானவை என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்திய தரப்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவிலும் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து அதிக எண்ணிக்கையில் கிருமித் தொற்றுப் பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக முதற்கட்ட சோதனைக்கு உதவக்கூடிய 'ரேப்பிட் டெஸ்ட் கிட்' என்று அழைக்கப்படும் துரித சோதனைக் கருவிகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதுவரை ஐந்தரை லட்சம் கருவிகள் வந்து சேர்ந்துள்ளன. சீனாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் இவற்றை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளன.
இந்நிலையில் இக்கருவிகள் துல்லியமாகச் செயல்படவில்லை எனப் பரவலாகப் புகார் எழுந்தது. எனவே இவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் துரித சோதனைக் கருவிகளை ஏற்றமதி செய்துள்ளதாகவும் தங்கள் தயாரிப்பை உரிய முறையில் மதிப்பிட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஏற்றுக் கொண்டதாகவும் சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தங்கள் தயாரிப்பு தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

