புதுடெல்லி: ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் ஏழைகளும் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிருமி நாசினி தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவது மனிதத்தன்மையற்றது என்று அக்கட்சியின் மேலிடக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனாலைத் தயாரிக்கவும் கிருமி நாசினி தயாரிப்பதற்காகவும் கையிருப்பில் உள்ள அரிசியைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இம்முடிவானது உணவு கிடைக்காமல் பட்டினியின் விளிம்பில் உள்ள மக்களின் கன்னத்தில் அறைவது போல் அமைந்துள்ளது," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இருப்பு வைக்கப்பட்ட அரிசியை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அக்கட்சி, பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு இக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை எனக் கூறியுள்ளது.
பட்டினியோடும் தங்குமிடம் இல்லாமலும் மக்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க அரிசியை மடைமாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் இது ஒரு குற்றச்செயல் என்றும் தெரிவித்துள்ளது.
"உணவு தானியம் என்பது மக்களுக்குத்தானே தவிர எரிபொருளுக்கு அல்ல.
"அதிலும் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், பெட்ரோலில் ஓடும் வாகனங்கள் ஊரடங்கால் ஓடாத நிலையில், பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலை தயாரிக்க மதிப்புமிக்க அரிசியைப் பயன்படுத்துவது அறிவுக்குப் பொருந்தாதது," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

