புதுடெல்லி: உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மற்ற உலக நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்படப் போகிறது என்பது உண்மைதான் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி தொடர்ந்தால் மற்றும் ஊரடங்கு விரைவில் நீக்கப்படாவிட்டால் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை என நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள் வேகமாக இருக்கும். ஏனென்றால் பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு உண்மையில் பொருளாதாரம் எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என்று நம்புகிறார்கள்.
"இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நெருக்கடிக்கு முன்னதாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்," என்றார் சுப்பாராவ்.
நாட்டில் எந்த மூலதனமும் அழிக்கப்படவில்லை என்றும் தொழிற்சாலைகள் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் இந்திய மக்கள் வேலை செய்யத் தயாராக உள்ளனர் என்றார்.

