புதுடெல்லி: கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று பிரதமர் மோடியிடம் மாநில முதல்வர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), எடியூரப்பா (கர்நாடகம்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), உத்தவ் தாக்கரே (மராட்டியம்), கொன்ராட் சங்மா (மேகாலயா), யோகி ஆதித்யநாத் (உத்தரப்பிரதேசம்), நிதிஷ் குமார் (பீகார்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்) உள்ளிட்ட முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் காெணாளி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர்.
போதிய நேரமின்மை காரணமாக நாராயணசாமி, நிதிஷ்குமார், கொன்ராட் சங்மா உள்ளிட்ட 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேசி னர். மற்ற மாநில முதல்வர்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமருக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக முதல்வர்களின் கருத்துகளைப் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்.
அப்போது பேசிய பெரும்பாலான முதல்வர்கள் நாட்டில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாத தால் மே 3ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று வலியுறுத்தினர்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியபோது, "கூட்டத்தில் பேசிய பெரும்பாலான முதல்வர்கள் சில பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பதோடு 3ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கை நீக்கும் பிரச்சினையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்ற அவசியத்தை அனைத்து முதல்வர்களும் ஒருமனதாக பிரதமரிடம் தெரிவித்தனர்.
"பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான கொள்கையை வகுக்கவேண்டும் என்று முதல்வர்கள் கூறினர்," என்று கூறினார்.

