அகமதாபாத்: இணைய விளையாட்டில் மனைவி தன்னைத் தொடர்ந்து தோற்கடிக்கச் செய்ததால் எரிச்சல் அடைந்த கணவர் ஒருவர் கோபத்தின் உச்சிக்கே சென்று மனைவியை ஒரு எதிரி போல் நினைத்து அடித்து உதைத்து தாக்கிய தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா கிருமி மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலானோர் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டு பல்லாங்குழி, தாயம், கேரம்போர்டு உள்ளிட்ட உள்புற விளையாட்டு களில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் விளையாட்டு வினையான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊரடங்கை வீட்டில் மகிழ்ச்சியாக கழிப்பதற்காக லுடோ (தாயம்) இணைய விளையாட்டை கைபேசியில் விளையாடத் தொடங்கி உள்ளார். பின்னர் தனது கணவரையும் அந்த விளையாட்டில் இணையச் செய்துள்ளார்.
இதையடுத்து இருவரும் தங்களது கைபேசிகளில் அந்த விளையாட்டு மூலம் மோதிக்கொண்டனர். இதில் அந்த பெண் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கணவன் எப்படியாவது மனைவியை தோற்கடிக்க நினைத்து தோல்வி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அடித்து உதைத்ததில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் கணவர் மீது எந்த புகாரும் அளிக்காமல் அவர் தனது தாய் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

