கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவில் கணவர் வெளியேறினார். காதலன் சுவர் ஏறிக் குதித்து காதலியை அழைத்துச் செல்ல முயன்றார்.
ஆனால் கடைசியில் ஒரு குடும்பமே போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது.
தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் 17 வயதுப் பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த நடைபாதை வியாபாரியான 22 வயது சுதீஷ் என்பவரைக் காதலித்தார்.
ஆனால் மாடசாமி தன் பெண்ணை சென்னையில் பணியாற்றி வந்த விவேக், 36, என்பவருக்குக் கடந்த 14ஆம் தேதி திடீர் திருமணம் செய்துவைத்தார்.
முதலிரவில் கணவரிடம் எல்லாவற்றையும் அந்தப் பெண் சொல்ல, கணவரான விவேக் கவலையுடன் மனம் நொந்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில், காதலனை மணப்பெண் தன் வீட்டுக்கு அழைக்க அவரும் இரவில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றார்.
அதைக் கண்ட பெண்ணின் பெற்றோர் போலிசை அழைத்தனர். விரைந்து வந்த அதிகாரிகள், அந்த 17 வயதுப் பெண்ணை மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமிக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால், தந்தை, கணவர், காதலன், கணவரின் பெற்றோர் என ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

