புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளது.
மே 25ம் தேதி முதல் குறைவான எண்ணிக்கையிலான சேவையுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்து விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
"விமான நிலைய முனைய கட்டடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பயணிகள் கட்டாயமாக உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் பாதை வழியாக செல்ல வேண்டும்.
"அனைவரும் தங்கள் கைபேசியில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அது தேவையில்லை," என விமான நிலையங்களின் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஊரடங்கையொட்டி உள்நாட்டு விமானச் சேவை மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

