புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை எட்டியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 5,609 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை சம்பவங்கள் பதிவாகுவது இது இரண்டாவது முறை.
தற்போது 63,624 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் நோயாளிகளில் இதுவரை 45,299 பேர் குணமடைந்துள்ளதாகவும் நேற்று காலை 8 மணியளவில் சுகாதார அமைச்சு அறிவித்தது.
நாடு முழுவதும் கொவிட்-19 நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,435 என்றும் அமைச்சு உறுதி செய்தது.
இதற்கிடையே இந்தியாவில் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிராவில் சுமார் 40 ஆயிரம் பேரும், குஜராத்தில் 12,537 பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 11,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையே, ஆந்திராவில் நேற்று பேருந்து போக்குவரத்து தொடங்கியது. எனினும் சிறுவர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பேருந்தில் செல்ல அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.

