சுடச் சுடச் செய்திகள்

இந்தியாவில் கொரோனா: 118,000 பேர் பாதிப்பு; பலி 3,583; குணமடைவோர் 40% கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் 6,088 பேருக்குத் தொற்று

மும்பை: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வியாழக்கிழமை ஆக அதிகமாக 6,088 பேரைக் கொரோனா கிருமி தொற்றியதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது.

நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில உள்நாட்டு விமானச் சேவைகள் தொடங்கவிருக்கும் நிலையில் அங்கு கொரோனா கிருமி கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கி இருக்கிறது.

மொத்தம் 118,000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 3,583 பேர் மரணமடைந்துவிட்டனர். வியாழக்கிழமை மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு கூடி இருக்கிறது.

கொரோனா காரணமாக மார்ச் 25 முதல் மே 31 வரை இந்தியாவில் ஊரடங்கு நடப்பில் இருந்து வருகிறது. கிருமி பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்குப் பல கட்டுப்பாடுகளுடன் சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்ட பிறகு பாதிப்பு கூடி இருக்கிறது என்று இந்திய பொது சுகாதார அறநிறுவனம் என்ற அமைப்பைச் சேர்ந்த தொற்றுநோய்த் துறை பேராசிரியர் கிரிதர் பாபு தெரிவித்தார்.

கொரோனா மரணத்தைக் குறைப்பதே சவால் என்று குறிப்பிட்ட அந்தப் பேராசிரியர், இதற்கான வளங்கள் இந்தியாவில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 40.32% அளவுக்குக் கூடி வருவதாக சுகாதார, குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சு தெரிவித்தது.

நாட்டில் 555 பரிசோதனைக் கூடங்களில் 26,15,920 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 3,027 கொவிட்-19 மருத்துவமனைகளும் சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. 7,013 கொவிட்-19 பராமரிப்பு நிலையங்கள் சேவை வழங்குகின்றன.

2.81 லட்சம் தனி படுக்கைகள் தயாராக உள்ளன. 31,250 தீவிர கண்காணிப்புப் படுக்கைகளும் 11,387 செயற்கை சுவாச வசதி உள்ள படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

மத்திய அரசு, மொத்தம் 65 லட்சம் சொந்த பாதுகாப்புச் சாதனங்களையும் 101.07 லட்சம் என்95 முகக்கவசங்களையும் மாநிலங்களுக்கு வழங்கி இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon