‘ஓசிஐ’ இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு

கொரோனா அச்சம் காரணமாக அனைத்துலக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டு இந்தியர்கள் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை தளர்த்தியது.

இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (ஓசிஐ) வைத்திருக்கும் இந்தியர்கள் நாடுதிரும்ப அனுமதிக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளில் மத்திய உள்துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் (மைனர்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள் அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப அனுமதி அளிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக இந்தியாவிற்கு வர அனுமதி அளிக்கப்படும். தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ அட்டை வைத்திருந்தால் அந்த இந்தியர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.