கலங்கி நிற்கும் மகாராஷ்டிரா: ஒரே நாளில் 60 பேர் மரணம்

1 mins read
b820fd36-937c-4e4b-9ce4-c01902fd66d6
சொந்த ஊர்களுக்குத் திரும்ப பேருந்துக்காக தாராவி குடிசைப்பகுதிக்கு வெளியே காத்திருந்தவர்கள். படம்: ஏஎஃப்பி -

மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றின் பிடி மேலும் இறுகி வருகிறது.

நேற்று (மே 23) ஒரே நாளில் அங்கு 60 பேர் 'கொவிட்-19' நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா கிருமித் தொற்று பரவியுள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது மகாராஷ்டிரா.

அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் அங்கு புதிதாக 2,608 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே வேளையில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் கிருமித்தொற்றால் 1,577 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள தாராவி குடிசைப் பகுதியையும் கொரோனா கிருமித்தொற்று முடக்கிப் போட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 1,500க்கும் மேற்பட்டவர்கள் 'கொவிட்-19' நோயால் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தக் குடிசைப்பகுதியில் புதிதாக 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் மட்டும் 'கொவிட்19' நோய்க்கு 58 பேர் பலியாகி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்