கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த் தொற்று: ஒரே நாளில் 68 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த் தொற்று: ஒரே நாளில் 68 பேருக்கு பாதிப்பு

1 mins read
c544653a-6a67-4627-bc51-8aeb0cf1a7ba
மாலத்தீவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்தில் பேருந்து மூலம் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்படுமூ முகாமுக்கு அழைத்துசூ செல்லப்படுகின்றனர்.. படம்: ஏஎப்பி-அருண் சந்திரபோஸ் -

திருவனந்தபுரம்: கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் நடவடிக்கைகளில் கேரளா சிறந்த முன் உதாரணமாக இருந்து வரும் நிலையில், அங்கு புதிதாக ஒரே நாளில் 68 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இவர்களில் 7 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர்.

கேரளாவில் 'கொவிட்-19' நோய்க்கு 4 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் துரித கதியில் மேற்கொண்டதால் அங்கு அதிக உயிரிழப்பு ஏற்படவில்லை.

அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு அதிகமானோர் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கேரளாவில் நோய் தொற்றியோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் விமானம் மூலம் 7,303 பேரும் கப்பல் மூலம் 1,621 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 76,608 பேரும் ரயில் மூலம் 3,108 பேரும் கேரளாவுக்குத் திரும்பி உள்ளனர்.

மொத்தத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊர் திரும்பியதை அடுத்து கடந்த 17ஆம் தேதியில் இருந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை இதுவரை 794 பேருக்கு 'கொவிட்-19' நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 515 பேர் குணமடைந்துள்ளனர். நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.