திருவனந்தபுரம்: கொரோனா கிருமித்தொற்றுப் பிரச்சினையை எதிர்கொண்டு சமாளிக்க கேரளா புதிய வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கு கேரளா முன்மாதிரியாக திகழ்வதாகவும் நேற்று முன்தினம் காணொளி வசதி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அனைத்தையும் கேரள மாநிலம் சமாளிக்கும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது 'கொவிட்-19' நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பலர் கேரளாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டினார். அதற்காக அவர்களை அன்னியப்படுத்திவிட முடியாது என்றும் அவர்களுக்கும் கேரளாவில் உரிமை உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
இதற்கிடையே கேரளாவில் நோய்த்தொற்று ஆபத்துள்ள பகுதிகளின் எண்ணிக்கை 55ஆக உயர்வு கண்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தான் கேரளாவில் கிருமித்தொற்று பரவவில்லை என்றும் உயிரிழப்புகள் குறைவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சீனாவில் கொரோனா கிருமியின் தாக்கம் தென்பட்டதுமே கேரளாவில் 18 நிபுணர் குழுக்களை அமைத்து அக்கிருமியை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம். ஜனவரி 30ம் தேதி வூஹானில் இருந்து முதல் நோயாளி கேரளா வந்தடைந்தார்.
"தொடக்கம் முதலே நோயாளிகளை உடனுக்குடன் கண்டறிவது, தனிமைப்படுத்துவது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது ஆகிய நடவடிக்கைகளை கச்சிதமாக மேற்கொண்டதால் தான் கேரளாவில் உயிரிழப்பு விகிதம் ஆகக் குறைவாக உள்ளது.
"இங்கிலாந்து தூதரக ஊழியர்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களை தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க விரும்புவதாக தூதரகம் கேட்டுக்கொண்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் கேரள அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்புவதாக தெரிவித்தனர். குணமடைந்த பின்னர் கேரள அரசுக்கு நன்றியும் தெரிவித்தனர். அந்த அளவிற்கு கேரளா திட்டமிட்டு செயல்பட்டது," என்றார் அமைச்சர் ஷைலஜா.

