கொவிட்-19ஆல் உயிரிழந்த மருத்துவர்; தகனம் உட்பட சகலமும் செய்த மகன்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் சுமார் 32,000 பேருக்கு கிருமித் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அங்கு 1,026 பேர் உயிரி்ழந்தனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இருப்பினும் மருத்துவர்களும் தாதியரும் தன்னலம் கருதாது அயராது பணிபுரிந்து கொரோனா நோயாளிகளுக்கு   சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் இறந்த மூத்த மருத்துவர் ஒருவரின் உடலை எரிக்க  யாரும் முன்வராத நிலையில், மருத்துவரான அவரது மகனே சுமந்து சென்று, தகனம் செய்ய வேண்டிய நிலை மும்பையில் ஏற்பட்டது.

 மும்பை கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்த ஒரு மருத்துவருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று மருத்துவர் உயிரிழந்தார்.

அவரது உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்ய முயற்சி செய்த மருத்துவரின் மகனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. 

கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல்களை தொடுபவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அதனால் வேறு வழி இல்லாமல் மருத்துவரான அவரது மகனே பாதுகாப்பு உடைகள் அணிந்து தனது நண்பரின் உதவியுடன் தந்தையின் உடலை வண்டியில் ஏற்றி தகனச்சாலைக்கு கொண்டு சென்றார்.

உடலை தகனம் செய்ய ஒருவரும் வரவில்லை. பின்னர் மகனே அனைத்து வேலைகளையும் செய்து தனது தந்தையின் உடலை தகனம் செய்தார். 

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் இறுதி சடங்கிற்கு உதவ முன்வராத மனிதாபிமானமில்லா செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online