ஐந்து மாநிலங்களில் அதிகரித்த தொற்று

புதுடெல்லி: இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரி அந்த மாநில அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை மற்றும் ஊரடங்கு தளர்வு காரணமாக, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்று வாரங்களாக கிருமி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரச் செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குநர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் காணொளி வழியாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்ட பாதிப்பு, இறப்பு, பரிசோதனை விவரம் உள்ளிட்ட தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன. ‘ஆரோக்கிய சேது’ செயலி மூலம் கிடைத்துள்ள தரவுகளின் பயன்கள் குறித்து அந்த மாநிலங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு செய்து நோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முதியோர், இதர நோய் இருப்பவர்கள் ஆகியோர் மீது சிறப்புக் கவனம் செலுத்துமாறு மத்திய சுகாதாரச் செயலாளர் அறிவுறுத்தினார்.

கொரோனா நோயாளிகளுடன் இதர நோயாளிகளின் சிகிச்சையிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.