கொரோனா தொற்று அச்சம்; தனிமைப்படுத்தப்பட்ட குதிரை

கொரோனா கிருமிப் பரவலாம் மனிதர்களை மட்டுமல்ல, குதிரையையும் தனிமைப்படுத்திய சம்பவம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்திருக்கிறது.

காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. 

இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.

ஜம்மு வட்டாரத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்து ரஜோரிக்கு சென்றார். இவர் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அந்த நபர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்தார். 

கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்ட நிலையில், பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை தடுத்து நிறுத்திய போலிசார் உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வரும் வரை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையை தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென அதன் எஜமானரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்ட நிலையில், லாடத்தில் தனியாக கட்டிவைக்கப்பட்டுள்ளது குதிரை. மனிதர்களிடமிருந்து குதிரைகளுக்கு கொரோனா கிருமி பரவுமா என்பதும் குதிரையிலிருந்து மனிதர்களுக்கு பரவுமா என்பதும் தெரியவில்லை.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online