கோயிலுக்கு வந்த பக்தரின் தலையைத் துண்டித்த பூசாரி; கொரோனாவை ஒழிக்க இப்படி செய்ததாக வாக்குமூலம்

பூசாரி ஒருவர் ஆடவரின் தலையைத் துண்டித்து நரபலி கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நரபலி கொடுத்தால் கொரோனா கொள்ளைநோய்ப் பரவல் முடிவுக்கு வரும் என்று  நம்பியதால் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

ஒடிஷாவில் உள்ள ஒரு ஆலயத்தில் நேற்று இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறாது.

கட்டாக்குக்கு அருகில் நரசிங்கபுரம் என்ற ஊரில் தேவி பிராமணி ஆலயத்தில் 70 வயதான சன்சாரி ஓஜா என்பவர் பூசாரியாக இருக்கிறார்.

கிருமித்தொற்று சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, நரபலி கொடுக்குமாறு பூசாரியின் கனவில் சாமி வந்து கூறியதால் இவ்வாறு நடந்துகொண்டதாக அந்தப் பூசாரி போலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.

55 வயதான சரோஜ் குமார் பிரதான் எனும் அந்த ஆடவர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு குனிந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, பின்னாலிருந்து ஓடி வந்த ஓஜா, கோடாரியால் சரமாரியாக பிரதானின் கழுத்தில் வெட்டினார்; தலை துண்டானது.

இதனையடுத்து, அந்த பூசாரி போலிசில் சரணடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

விசாரணையின்போது வெட்டிக் கொன்றதை ஒப்புக்கொண்ட ஓஜா, "இது தேவியின் கட்டளையின்பேரில் நிறைவேற்றப்பட்டது,” என்று கூறியதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், அந்த கிராமத்தில்  மாந்தோப்பு ஒன்றின் தொடர்பில் பிரதானுக்கும் பூசாரிக்கும் இடையே, பல காலமாக பிரச்சினை ஒன்று நிலவி வந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.

ஒடிஷாவில் இன்று புதிதாக 67 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தம் 1,660 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 65 பேர், வேற்று மாநிலங்களில் வேலைக்காகச் சென்று, தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள். அவர்கள் மாநிலத்தின் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online