20 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் கர்நாடகாவில் தயாரிப்பு

பெங்களூரு: நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தான் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது என கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவிலேயே 20 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்கள்), படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாராகி வருவதாக அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

கொரோனா கிருமி விவகாரத்தை திறம்பட எதிர்கொண்டு வருவதால் உலக அளவில் இந்தியாவை அனைவரும் திரும்பிப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், கிருமித்தொற்றை நினைத்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

“130 கோடி மக்கள் உள்ள நம் நாட்டில் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பிரதமர் மோடி மக்களை படிப்படியாக காப்பாற்றி வருகிறார்.

“கர்நாடகாவில் கொரோனா கிருமித்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

“அதனால் மக்கள் அனைவரும் இப்போது மகிழ்ச்சியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார் அஸ்வத் நாராயண்.

வரும் 8ம் தேதி முதல் மாநிலத்தில் அனைத்து கோவில்களும் வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தகுந்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.