பாதிப்பு இரண்டு லட்சம் கிட்டத்தட்ட பாதிப் பேர் மீண்டனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி இரண்டு லட்சத்தைத் தொட்டு இருக்கும்.

மத்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை 9 மணி நிலவரத்தைத் தெரிவித்தபோது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98ஆயிரத்து 706 ஆக இருந்தது. அதே நேரம் நோயிலிருந்து கிட்டத்தட்ட பாதிப் பேர் மீண்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்றுக் காலை வரை 95,526ஆக இருந்தது என்றும் அமைச்சு தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை காலை வரை 24 மணிநேரத்தில் 8,171 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் 204 பேர் உயிரிழந்ததாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாண்டோர் எண்ணிக்கை 5,598 ஆனது.

மேலும் நேற்றுக் காலை வரையிலான 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 76 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் 50 பேர், குஜராத்தில் 25 பேர், தமிழகத்தில் 11 பேர் மாண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதற்கடுத்த நிலைகளில் மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் தலா 8 பேர், தெலுங்கா னாவில் 6 பேர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் தலா 4 பேர், பீகார், ஜம்மு காஷ்மீரில் தலா 3 பேர், ஆந்திராவில் இருவர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, உத்தரக்காண்டில் தலா ஒருவர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு பட்டியலிட்டது.

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 70,013 ஆகிவிட்டது. மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 2,362 ஆக அதிகரித்துவிட்டது. இவர்களில் 1,300 பேர் மும்பையில் மாண்ட வர்கள். உயிர்ப்பலி எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் இரண்டாவதாக உள்ளது.

அங்கு நேற்றுக் காலை வரை மாண்டோர் எண்ணிக்கை 1,063. அதற்கு அடுத்து டெல்லியில் 523, மத்தியப் பிரதேசத்தில் 358, மேற்கு வங்காளத்தில் 325, ராஜஸ்தானில் 198 என மொத்த மரண எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 217 ஆகவும் தமிழகத்தில் 184 ஆகவும் அதிகரித்த நிலையில் தென் மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா, கார்நாடக மாநிலங்களில் மரண எண்ணிக்கை 100க்குக் குறைவாகவே இருந்தது.

தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாப்பில் 45 என அந்த எண்ணிக்கையை அமைச்சு பட்டியலிட்டது.