புதுடெல்லி: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பணியில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை அந்த நாட்டின் வேவுத்துறையினர் அலைக்கழிப்பதாக பாகிஸ்தான் அரசிடம் புதுடெல்லி புகார் தெரிவித்து இருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் இந்திய அரசதந்திரிகளைப் பின் தொடர்ந்தபடி பாகிஸ்தான் வேவுத்துறையினர் மோட்டார் சைக்கிள்களில் செல்வதைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு இருக்கின்றன என்பதையும் இந்தியா தன் புகாரில் சுட்டியது.
புதுடெல்லியில் வேவு பார்த்ததற்காக பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளை இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அந்த இருவரும் மே 31ஆம் தேதி பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனையடுத்து இந்திய அரசதந்திரிகளை பாகிஸ்தான் அலைக்கழிப்பதாகப் புகார் கிளம்பி இருக்கிறது. இந்திய அரசதந்திரிகளைப் பணி செய்யவிடாமல் பாகிஸ்தான் வேவுத் துறையினர் பல தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும் புகாரில் புதுடெல்லி குறிப்பிட்டு உள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகளை வாக னங்களில் பின்தொடரும் பாகிஸ்தான் வேவுத் துறையினர், அந்த அதிகாரிகளை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக இந்தியத் தகவல் வட்டாரம் ஒன்று குறிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் புதுடெல்லியில் இந்திய பாதுகாப்பு நிலையங்கள் பற்றிய ரகசிய தகவல்களைத் திரட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களைத் தடுத்து நிறுத்தி மடக்கிய இந்திய அதிகாரிகள், அந்தப் பாகிஸ்தானியருக்கு எதிராக அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். பிறகு அந்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து இப்போது பாகிஸ்தானில் இந்திய அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

