ஸ்பெயினையும் முந்தியது: ஐந்தாவது இடத்தில் இந்தியா

2 mins read
7d367f8c-f1d8-40c0-ab62-1437801e8f16
மும்பையின் தாராவி பகுதி சித்தி விநாயகர் கோவிலுக்கு வருவோ ரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ். -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில் ஸ்பெ­யினை முந்தி இந்­தியா 5ஆம் இடத்­தைப் பிடித்­துள்­ளது.

தற்­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 2.46 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. பலி எண்­ணிக்கை 7 ஆயி­ரத்தை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கிறது.

கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. எனி­னும் அண்­மைய சில நாட்­க­ளாக 'கொவிட்-19' நோய் தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து சீராக அதி­க­ரித்து வரு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 9,971 பேருக்­குப் புதி­தாக நோய்த் ­தொற்றியது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு ஞாயிற்­றுக்­கி­ழமை காலை தெரி­வித்­துள்­ளது. மேலும் இது­வரை நாடு முழு­வ­தும் 46 லட்­சம் பேருக்கு நோய்த்­தொற்­றைக் கண்­ட­றிய பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் ஒரு லட்­சம் பேரில் 17 பேருக்கு கொரோனா பாதிப்­புள்­ள­தா­க­வும் உல­க­ள­வில் இந்த விகி­தாச்­சா­ரம் லட்­சத்­துக்கு 87 பேராக உள்­ளது என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பலி எண்­ணிக்­கை­யைப் பொறுத்­த­வரை இந்­தி­யாவில் லட்­சம் பேரில் 0.49 பேர் இறக்­கின்­ற­னர் என்­றும் உல­க­ள­வில் இது ஒரு லட்­சம் பேருக்கு 5 பேராக உள்­ளது என்­றும் அமைச்சு மேலும் தெரிவித்தது.

இத்­தாலி, ஸ்பெ­யின் உள்­ளிட்ட சில நாடு­களில் இறப்பு விகி­த­மா­னது ஒரு லட்­சம் பேரில் 50க்கும் கூடுதலாக உள்­ளது என சுகா­தார அமைச்சு சுட்­டிக் காட்­டி­யுள்­ளது. இந்­நி­லை­யில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யில் அமெ­ரிக்கா, பிரே­சில், ரஷ்யா, இங்­கி­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக இந்­தியா இடம்­பெற்­றுள்­ளது. முன்­ன­தாக ஐந்­தாம் இடத்­தில் ஸ்பெ­யின் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்­தியா ஸ்பெ­யினை முந்தியுள்ளது.