திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நமீதா நாராயணன். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை முதல் கேரளக் கல்லூரிகளில் இணையம் வழி நடத்தப்படும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஆனால், நமீதாவின் வீட்டில் உள்ள இணைய இணைப்பின் வேகம் போதுமானதாக இல்லை.
மேலும், இணைப்பில் உள்ள கோளாறு காரணமாக 'சிக்னல்' சரியாக வரவில்லை. தன் வீட்டைச் சுற்றி பல இடங்களில் நின்று சோதித்துப் பார்த்தும் இணைய இணைப்பு சீரடையாததால் சரிவரப் படிக்க முடியாமல் அவதியுற்றார்.
வேறுவழியின்றி வீட்டுக் கூரையின் மீதேறி நின்றபோது இணைப்பு வேகமாக இருந்துள்ளது. இதையடுத்து கொஞ்சமும் தயங்காமல் தினமும் வீட்டுக் கூரை மீதேறி அமர்ந்து இணைய வகுப்பில் பங்கேற்றார் நமீதா. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்குத் தெரியவந்தபோது நமீதாவின் வீட்டுக்கே வந்து இணைய இணைப்பை சரி செய்தது அந்நிறுவனம்.

