இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், மருத்துவமனை சிகிச்சைக்கான பணத்தைக் கட்டத் தவறியதாகக் கூறப்படும் முதியவர் படுக்கையில் கட்டப்படுவதைக் காட்டும் படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
80 வயது லட்சுமி நாராயணன் என்பவரின் குடும்பத்தினர் ஏற்கெனவே கொடுத்த கட்டணத்திற்கு மேல் 11,270 ரூபாயை மருத்துவமனையினர் கூடுதலாகக் கேட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. முதியவரின் குடும்பம் அந்தப் பணத்தைத் தர மறுத்ததால் அந்த முதியவரைப் போகாதபடி தடுக்க அவர் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு மூன்று நான்கு நாட்களாக சரியான உணவு கொடுக்கப்படவில்லை என்று லட்சுமி நாராயணனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் முதலியோர் இச்செயலைக் கடுமையாக விமர்சித்த நிலையில் முதியோருக்கு வலிப்புப் பிரச்சினை இருப்பதால் அவர் அவ்வாறு கட்டப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

