கிருமித்தொற்று அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில், மருத்துவர் ஒருவர் 10 அடி தொலைவில் இருந்து இளையர் ஒருவர் மீது 'டார்ச்' அடித்து சோதனை செய்து சிகிச்சை அளித்துள்ளார்.
இச்சம்பவம் டுவிட்டரில் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இதை அறிந்த மக்கள் பலரும் அதிர்ச்சியுடன் மருத்துவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
காய்ச்சல் காரணமாக கண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 16 வயது இளையர் ஒருவர் சென்றுள்ளார். காய்ச்சல் என்றதும் அவரை மருத்துவமனை வாயிலிலேயே நிற்கவைத்த மருத்துவர், தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து 'டார்ச்' அடித்துப் பார்த்து மருந்து எழுதிக் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சலால் நோய்வாய்ப்பட்ட இளையருக்கு மிக அலட்சியமான முறையில் மருத்துவம் பார்த்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு மருத்துவருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

