இந்தியாவின் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 276,000ஐ கடந்துவிட்ட நிலையில் மகாராஷ்டிர மாநிலமே அதிக கிருமித்தொற்றால் அவதிப்படுகிறது.
ஊரடங்கு நடப்பில் இருப்பினும் அத்தியாவசியத் தேவைகளுக்காக அங்கு சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமது வேண்டுகோளுக்குக் கட்டுப்படாவிட்டால் தளர்வுகள் மீட்கப்படும் என்றும் எச்சரிக்கையாகத் தெரிவித்தார்.
"கிருமித்தொற்று இன்னும் நம்மை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. பொருளியல் நடவடிக்கைகளுக்காக ஊரடங்கை ஓரளவுக்குத் தளர்த்தி இருக்கிறோம். அரசாங்கத்தின் விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்.
"உடற்பயிற்சி செய்ய அனுமதி அளித்தது உங்களுக்கு நல்லது செய்யத்தானே தவிர உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ள அல்ல," என்றார்.
ஊரடங்கு சிறிய அளவில் தளர்த்தப்பட்டதும் மாநிலம் முழு வதும் ஆங்காங்கே பெருமளவில் மக்கள் கூடியதைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு தெரிவித்தார்.

