வங்கி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி மதிப்புள்ள, தங்க, வைர நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு சென்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ. 13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதுபோல, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 5,000 கோடிக்கும் அதிகமான நீரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது.
நீரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், முதலீடுகள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டதுடன் அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நீரவ் மோடி பின்னர் நாடு திரும்பிவில்லை.
லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் போலிசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ எடைகொண்ட தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,350 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டு நீரவ், மெகுல் இருவரும் ஹாங்காங்கிலிருந்து, துபாய்க்கு இந்த நகைகளைக் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

