தமிழக - கேரள எல்லையில் வனப்பகுதியில் நடைபெற்ற திருமணம்; கையசைத்து விடைபெற்ற மணமகள்

தமிழக - கேரள எல்லையில் வனப்பகுதியில் நடைபெற்ற திருமணம்; கையசைத்து விடைபெற்ற மணமகள்

2 mins read
e00b0b9b-acae-4025-8b74-f6b9679c58db
முகூர்த்த நேரம் நெருங்கியதும் கிருமிநாசினி தெளித்த மாலைகளை மணமக்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினர். தாலியை மணமகனிடம் வழங்குவதற்கு முன்பு கிருமிநாசினியை வழங்கி கை கழுவச் சொன்னது குறிப்பிடத்தக்கது. நன்றி: தி நியூஸ் மின்யூட் -
multi-img1 of 3

தமிழகத்தின் கோயமுத்தூரைச் சேர்ந்த ராபின்சன், கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறைச் சேர்ந்த பிரியங்கா இருவரின் திருமணம் இரு மாநில எல்லையில் முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் சகிதம் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமகன், மணமகள் குடும்பத்தினர் மட்டுமின்றி சின்னாறு சோதனைச் சாவடி அதிகாரிகளும் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசிர்வதித்தன.

சோதனைச் சாவடி அலுவலகத்தின் முன்பு சாலையின் நடுவில் ஜமுக்காளத்தை விரித்து மண மேடையாக்கி, திருமணத்துக்குத் தேவையான பொருட்களை அடுக்கினர் சோதனைச் சாவடி அதிகாரிகள்.

தமிழகப் பக்கத்திலிருந்து மணமகனும் கேரள பக்கத்திலிருந்து மணமகளும் சர்வ அலங்காரத்துடன் மண மேடைக்கு வந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்கியதும் கிருமிநாசினி தெளித்த மாலைகளை மணமக்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினர். தாலியை மணமகனிடம் வழங்குவதற்கு முன்பு கிருமிநாசினியை வழங்கி கை கழுவச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், கொவிட்-19 விதிமுறைகள் மீறப்படாத வகையில் திருமணம் நடப்பதை உறுதி செய்தனர்.

திருமணம் நிறைவுற்று, மணமகனுடன் பிரியங்கா செல்ல வேண்டிய நேரம் வந்தது. மகளை ஆரத்தழுவி அனுப்பிவைக்க முடியவில்லை அவரது பெற்றோரால்.

கைகளை அசைத்து பெற்றோருக்கு விடைகொடுத்த பிரியங்கா, கணவருடன் கிளம்பினார்.

ராபின்சனுக்கும் பிரியங்காவுக்கும் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

கொச்சியில் தாதியாகப் பணிபுரிகிறார் பிரியங்கா; ராபின்சனுக்கு புதுடெல்லியில் வேலை.

நாடு தழுவிய முடக்கத்தால் அவர்களின் திருமணம் தடைப்பட்டது.

பிரியங்கா தமிழ் நாடு செல்லவும், ராபின்சன் கேரளாவுக்குச் செல்லவும் அனுமதி பெறப்பட்ட பிறகு, இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

முதலில், தமிழகத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் ஆலயத்தில் திருமணம் செய்ய விரும்பிய அவர்களுக்கு மாநிலங்களின் எல்லையில் திருமணம் செய்ய மட்டுமே அனுமதி கிடைத்தது.

பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, மணமக்களின் குடும்பத்தார் வேலை எதிலும் ஈடுபடாமல் தள்ளியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். சாவடி அதிகாரிகள்தான் பணிகளில் ஈடுபட்டனர்.

கொவிட்-19 பிரச்சினைகளால் மாநிலங்களுக்கிடையே யாரும் செல்வதற்கு அனுமதி இல்லாததால் இத்தகைய திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்