புதுடெல்லி: கொரோனா கிருமிக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம் எனக் குறிப்பிட்டார்.
இது, தைரியமான முடிவுகள் மற்றும் தைரியமான முதலீடுகளுக்கான நேரம் என்றார் பிரதமர் மோடி.
தற்போது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பணியாற்றுவோர் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையைத் தருகிறது என்றார்.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,88,579ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அன்றாடம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதுவரை 1.41 லட்சம் பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் 1.37 லட்சம் பேர் கொவிட்-19 நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரையிலான காலத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,102ஆக நீடிக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை சுமார் 52 லட்சம் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1.5 லட்சம் பேருக்கு கொவிட்-19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மும்பையில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

