புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேர் கொண்ட குடும்பம் சுமார் ஒரு மாத காலம் போராடி, வெற்றி கண்டுள்ளது. வடமேற்கு டெல்லியில் வசிக்கும் முகுல் கார்க், வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் மோசமான காலகட்டங்களை தமது குடும்பம் ஒருசேர கடந்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள மூன்று தளங்கள் கொண்ட வீட்டில் 33 வயதான முகுல் கார்க் மூன்றாவது மாடியில் தம் மனைவி, இரு குழந்தைகள், பெற்றோர் மற்றும் பாட்டனாருடன் வசிக்கிறார்.
மீதமுள்ள இரு தளங்களில் அவரது தந்தையின் உடன்பிறந்தோரும் அவரது குடும்பத்தாரும் உள்ளனர். வீட்டிலுள்ள 17 பேரில் பிறந்து 4 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை தொடங்கி முகுலின் 90 வயதான பாட்டனார் வரை படுத்த படுக்கையாகிவிட்டனர்.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முகுலின் மாமாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் இருவருக்கு காய்ச்சல் உண்டானதும் பதறிப் போனார் முகுல். அப்போதும் அவர் மருத்துவப் பரிசோதனைக்கு யாரையும் அழைத்துச் செல்லவில்லை.
ஆனால் மே முதல் வாரம் 54 வயதான அவரது அத்தை மூச்சுவிட சிரமப்படவே, பயந்துபோன முகுல், உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார்.
"அதன் முடிவில் வீட்டிலுள்ள 11 பெரியவர்களுக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதியானது. உடனே எல்லாமே பறிபோனதாகவும் தனிமையாகவும் உணர்ந்தோம். வீட்டில் இருந்து யாருமே வெளியே போகவில்லை. வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வரவும் இல்லை. பிறகு எப்படி கிருமித்தொற்று ஏற்பட்டது எனக் குழப்பமாக உள்ளது," என்கிறார் முகுல்.
பின்னர் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற உபாதைகள் உள்ளவர்கள் ஒரு தளத்திலும், தீவிர காய்ச்சல் உள்ளவர்கள் தனி அறைகளிலும் தங்கியுள்ளனர்.
ஒருவேளை அனைவருக்கும் ஏதாவது ஆகிவிட்டால் இறுதிச் சடங்கிற்கேனும் யாராவது வருவார்களா? என்று யோசித்ததாகக் குறிப்பிட்டுள்ள முகுல், அந்தளவுக்கு தனிமை வாட்டியதாகச் சொல்கிறார்.
"ஒரே இரவில் எங்கள் வீடு கொரோனா மையமாக மாறிப்போனது. ஊரடங்கின் முதல் மாதம் இனிமையாகக் கழிந்தது. வீட்டில் உள்ள 17 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசி, விளையாடி, உணவருந்தி பொழுதைக் கழித்தோம். ஆனால் மே மாதம் நிலைமை தலைகீழானது. இதை நோய் மாதம் என்றே இனி குறிப்பிடுவோம்," என்கிறார் முகுல்.
இந்நிலையில் மே இரண்டாம் வாரம் தொடங்கி ஜூன் 1ஆம் தேதிக்குள் முகுல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவராக கொவிட்-19 பிடியிலிருந்து விடுபட்டனர். தற்போது அவரது குடும்பம் மீண்டும் நிம்மதிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.

