மாநில எல்லைகளை மூடியது ராஜஸ்தான் அரசு

மாநில எல்லைகளை மூடியது ராஜஸ்தான் அரசு

1 mins read
a355ffa2-c89b-45df-95e8-84028481aefa
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட். படம்: Twitter/@ashokgehlot51 -

ஜெய்ப்­பூர்: கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதையடுத்து மாநில எல்லைகளை மூடுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 பாதிப்பு உள்ளது.

இதையடுத்து அண்டை மாநிலங்களுடனான எல்லைகளை மூடுவதாக ராஜஸ்தான் காவல்துறைத் தலைவர் எம்.எல். லாதர் அறிவித்தார்.

அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ராஜஸ்தானில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளி மாநிலங்களில் இருந்து யாரும் உள்ளே வரவோ முடியாது என்றும், அவசர காரணங்களுக்காக வெளியே செல்வோர் 'ஆட்சேபனை இல்லை' என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

"போக்குவரத்தைக் கட்டுப்படுத்த மாநில எல்லைகளை மூடுவது மட்டுமின்றி, முக்கிய சாலைகள் மற்றும் ரயில், விமான நிலையங்கள் அருகே சோதனைச்சாவடிகளும் அமைக்கப்படும்.

"இந்தக் கட்டுப்பாடு ஒரு வாரம் நீடிக்கும். அதன் பிறகு தளர்த்தப்படக் கூடும்," என்றும் லாதர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ராஜஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.