புதுடெல்லி: இந்தியாவின் தலை நகரில் உள்ள முக்கிய பள்ளிவாசல் மீண்டும் மூடப்பட்டது. கொரோனா கிருமிப் பரவல் அச்சம் காரணமாக பள்ளிவாசல் மூடப்படுவதாக ஜமா மஸ்ஜித்தின் நிர்வாகம் அறிவித்தது.
17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் உலகப் புகழ்பெற்றது. அண்மையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கடந்த திங்கட்கிழமையன்று மீண்டும் பள்ளிவாசல் திறக்கப்பட்டது. ஆனால் வரும் வாரங்களில் கிருமித் தொற்று அதிவேகத்தில் பரவலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக மக்களின் பாதுகாப்புக்காக பள்ளிவாசல் மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்தது. புதுடெல்லியில் கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்து வருவதால் சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து இம்மாதம் 30ஆம் தேதி வரை பள்ளிவாசல் மூடப்படும் என்றும் அது கூறியது.
சென்ற வியாழக்கிழமை டெல்லியில் மட்டும் 1,800 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாகின. சுமார் 20 மில்லியன் பேர் வசிக்கும் இங்கு இதுவரை 34,000 கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மடிந்துவிட்டனர்.
டெல்லியில் கொரோனா கிருமி பல்கி பெருகி வருகிறது என்று ஜமா மஸ்ஜித்தின் சையது அஹ்மட் புக்ஹாரி தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிவாசலின் ஊடகத் தொடர்பு அதிகாரி ஒருவர் கிருமித் தொற்றால் இறந்துவிட்டார். இதன் காரணமாகவும் நிர்வாகம் தாமாக முன்வந்து பள்ளிவாசலை மூட முடிவு செய்தது.
இந்த நிலையில் புதுடெல்லியில் இம்மாதம் முடிவதற்குள் 550,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட லாம் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

