புதுடெல்லி: இந்தியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரிட்டனையும் மிஞ்சியதால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்துக்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 297,535 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது, பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 293,754 பேருடன் ஒப்பிடுகையில் சற்றுக் கூடுதலாகும். இதனால் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிய இந்தியா நான்காவது இடத்துக்கு வந்துள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் மளமளவென்று அதிகரித்தது. தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. மே 24 அன்று இந்தியா பட்டியலில் 10வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் பதினெட்டு நாட்களில் கிருமித்தொற்று அதிகரித்து நான்காவது இடத்தை அடைந்துள்ளது.
சென்ற ஜூன் 1ஆம் தேதியில் இருந்து ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கிருமித்தொற்று அதிவேகத்தில் பரவியது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 லட்சமாக உள்ளது.
உலகிலேயே இந்தியாவில்தான் குறைவாக கிருமித்தொற்று சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது, ஆயிரம் பேருக்கு 3.78 பரிசோதனை விகிதமாக உள்ளது. இங்கிலாந்தில் இந்த விகிதம் ஆயிரம் பேருக்கு 53.33 சோதனைகளாக இருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகமும் குளோபல் சேஞ்ச் டேடா லேப்பும் பகுப்பாய்வு செய்த புள்ளிவிவரங்கள் இதனை தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட உண்மையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலாக்கப்பட்டாலும் பரிசோதனைகளை அதிகரிக்காதது, கிருமி தொற்றும் இடங்களை அடையாளம் காணத் தவறியது போன்ற காரணங்களால் கிருமித் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இருந்தாலும் சமூகத்தில் பெரிய அளவில் கொரோனா கிருமிப் பரவல் இல்லை என மத்திய, மாநில அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.

