யுஎஸ் 73; பிரேசில் 85; ரஷ்யா 109; இந்தியாவில் 134 நாட்களில் 300,000 பேரைத் தொற்றியது
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமி அவசரப்படாமல் நிதானமாக ஆனால் அதிகமாக பரவுகிறது என்பது தெரியவந்துள்ளது. அந்த நாட்டில் 300,000 பேரை கிருமி 134 நாட்களில் தொற்றி இருக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் 73 நாட்களிலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துவிட்டது.
இந்த அளவு பிரேசிலில் 85 நாட்களாகவும் ரஷ்யாவில் 109 நாட்களாகவும் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் மொத்த மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
உலகில் கொரோனா கிருமி அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளும்தான் வரிசையாக முதல் இடங்களில் இருக்கின்றன.
ஆனால் கொரோனா கிருமி பரிசோதனை என்று வரும்போது இந்தியாவைவிட இதர மூன்று நாடுகளும் அதிக பரிசோதனைகளை நடத்தி இருக்கின்றன என்பது மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. கிருமி அதிகம் பாதித்துள்ள முதல் 10 நாடுகளைப் பார்க்கையில் இந்தியாவில்தான் பரிசோதனை மிகவும் குறைவாக இருக்கிறது.
இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 100,000 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இவ்வேளையில், கிருமி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக் குழுக்களை வீடு தோறும் அனுப்பி பரிசோதனைகள் நடத்தி தொடக்கத்திலேயே நோயாளிகளைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை மாநிலங்களை வலியுறுத்தி இருக்கிறது.
நாட்டில் குணமடைவோர் அளவு ஏறக்குறைய 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கிருமி இரட்டிப்பு விகிதம் ஊரடங்கு தொடங்கிய காலத்தில் 3.4 நாட்களாக இருந்தது. அது இப்போது 17.4 நாட்களாக ஆகி இருக்கிறது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு 100,000 பேருக்கும் அதிக மக்களைக் கிருமி தொற்றி இருக்கிறது. 3,717 பேர் பலியாகிவிட்டனர். இந்த அளவு வேகமாகக் கூடிவருகிறது.

