புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று கிடுகிடுவென உயர்வதால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. சவக்கிடங்கு களில் உடல்கள் குவிகின்றன.
இந்நிலையில், விலங்குகளை விட மோசமாக நோயாளிகள் நடத்தப்படுகிறார்கள் என்றும் பலியானவர்களின் உடல்கள் கையாளப்படும் விதம் கொடூரத்தின் உச்சமாக இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்து கண்டித்துள்ளது.
மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தேவையான வற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் மனிதாபிமானமற்ற முறைகளில் கையாளப்படுவதைக் காட்டும் பல காணொளிகள் அண்மைய நாட்களில் இணையத்தில் வலம் வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் தானே முன்வந்து வழக்குப் பதிந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஓர் அரசு அலுவலகத்தின் முன் திடீரென விழுந்து உயிரிழந்த ஒருவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு அந்த மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றமும் சிறுபான்மையினர் நல ஆணையமும் கடிதம் அனுப்பி இருக்கின்றன.

