புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று கிடுகிடுவென பெருகி வரும் நிலையில், பொதுப் போக்குவரத்துகளைத் தவிர்த்துக்கொண்டு சைக்கிள்களைப் பயன்படுத்தும்படி மக்களுக்கு மாநில நிர்வாகங்கள் ஊக்கமூட்ட வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கான வழிவகைகளை ஆராயும்படி மத்திய வீடமைப்பு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
பயணத்திற்குச் சைக்கிள் பாதுகாப்பான சாதனம் என்று உலகம் முழுவதும் கருதப்படுவதை அமைச்சு சுட்டிக்காட்டி இருக்கிறது.
கொவிட்-19 காலத்தில் கூட்டமாகச் செல்லாமல் தனியாக பயணம் செய்யவே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள்.
பேருந்து, ரயில்களில் கூட்டமாகச் செல்லும்போது கிருமி பரவும் ஆபத்து அதிகம். இதனால் சைக்கிள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தினால் கிருமி பரவுவதைத் தவிர்க்கலாம் என்று மத்திய அரசு குறிப்பிட்டு உள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரயில், பேருந்துகளில் சென்றால் ரொக்கமற்ற முறைகளில் கட்டணத்தைச் செலுத்த ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்திக் கூறி இருக்கிறது.
சைக்கிள்களைப் பயன்படுத்துவதால் செலவு குறைவதோடு உடல்நலத்திற்கும் நல்லது, அதைப் பயன்படுத்துவதும் எளிது, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு வராது, கிருமிப் பரவுவதையும் தடுத்துவிடலாம் என்று மத்திய வீடமைப்பு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.

