இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கக் கதையைச் சித்திரித்த திரைப்படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு வயது 34.
வீட்டுப் பணியாள் இவரது சடலத்தைப் பார்த்து போலிசுக்கு செய்தி கொடுத்தார். இவர் உயிரை மாய்த்துக்கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
பல பிரபலங்கள் சமூக தளங்களில் சுஷாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான சுஷாந்த் பீகாரைச் சேர்ந்த 'தேஷ் மேன் ஹாய் மேரா தில்' என்ற தொடரில் முதலில் அறிமுகமானார்.
2009ஆம் ஆண்டில் அவர் நடித்த 'பவித்ர ரிஷ்தா' என்ற தொடர் மூலம் பிரபலமான அவருக்கு, அந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது.
2013ஆம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 'த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்' புத்தகத்தின் திரைப்பட வடிவமான 'கை போ சே' மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் 'பிகே' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
2016ஆம் ஆண்டு, 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' திரைப்படத்தின் மூலம் மொழிகளைக் கடந்து பிரபலமானார்.
இவர் நடித்து கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் 'சிச்சோரே' (2019). இந்தப் படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டியிருந்தன.
சுஷாந்த் நாயகனாக நடித்த 'தில் பெசாரா' என்ற இந்திப் படம் கடந்த மாதம் 8ஆம் தேதி வெளியாக இருந்தது. ஊரடங்கு காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

