கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கடைக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் நம்பூதிரி என்பவர் தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள பூஜை அறையில் கொரோனா பிம்பத்தை வைத்து 'தினமும் பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறார். "ஓம் கொரோனா தேவியே, லோகா சமஸ்தா சுகினோ பவந்து..." என பூஜையின்போது மந்திரம் சொல்லி கொரோனா உருவத்தை ஆராதிக்கிறார்.
சமூக ஊடகங்களில் இச்செய்தி பரவியதும் 'இது முட்டாள்தனமான வழிபாடு' என சிலர் கடுமையாக விமர்சித்தனர். விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் கருத்து பரவியது.
ஆனால் இவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அகிலன், "கிருமி நோய்களை கடவுளாகக் கருதும் வழக்கம் இந்தியாவில் உண்டு. 'சிக்கன் பாக்ஸை' அம்மை நோய் எனவும் அம்மை போட்டிருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் கூறுகிறார்கள். அம்மனுக்குக் கோபம் வந்தால் அதுபோன்ற நோய் வரும் என்றும் கூறுவார்கள்.
"கொரோனா தேவியை வழிபட வேண்டும் என நான் யாரையும் அழைக்கவில்லை. என் வீட்டில் நான் வழிபடுவது எனது தனிப்பட்ட நம்பிக்கை. இங்கு வழிபாடு செய்ய வருபவர்கள் காணிக்கை வழங்க வேண்டும் எனவும் நான் கேட்கவில்லை. எனது வருமானத்துக்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன்," என்று தம்மை வந்து சந்தித்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகள் குணமடைவதற்காகவும் முன்களத்தில் நின்று போராடும் மருத்துவத் துறை, காவல்துறை, துப்புரவுத் துறை ஊழியர்களின் நலனுக்காக 'கொரோனா தேவி'யை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

