புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை நேற்றுக் காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 332,424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் மரணம் அடைந்தனர். இதன்மூலம் கொரோனா கிருமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. நாளைக்குள் மரண எண்ணிக்கை 10,000ஐ தொடக்கூடும் என மருத்துவ அதிகாரிகள் கூறினர். இதுவரை 169,798 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7,419 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதிலும் பல்வேறு மருத்துவமனைகளில் 153,106 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 107,958 பேருக்கும் தமிழகத்தில் 44,661 பேருக்கும் டெல்லியில் 41,182 பேருக்கும் குஜராத்தில் 23,544 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும் பரிசோதனைகளை அதிகரித்ததாலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா முதற்கட்டமாக 100 செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்) அனுப்பி வைத்து உள்ளது. சிகாகோ நகரில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக ஊடகச்செய்திகள் கூறின. இவை செஞ்சிலுவை சங்கத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும்.

