புதுடெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரை நேற்று காலையிலிருந்து காணவில்லை என்று இந்தியா புகார் செய்துள்ளது.
அதிகாரபூர்வப் பணிக்காக இருவரும் நேற்று காலை வெளியே சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதை அடுத்து, அவர்கள் இருவரும் இந்தியத் தூதரகத்துக்குத் திரும்பவில்லை என்றும் அவர்களது இருப்பிடம் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய அரசாங்கம் புகார் செய்துள்ளது.
அண்மையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த இருவரை உளவாளிகள் என்று குற்றம் சுமத்தி அவர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிவைத்தது இந்தியா.
அதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் மோசம் அடைந்துள்ளது.
வேவு பார்த்ததற்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளைத் திருப்பி அனுப்பியதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்ததாக இந்திய அரசதந்தரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மிகுந்த நெருக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்று இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
அவர்கள் செல்லும் இடமெல்லாம் பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை இடைவிடாது மூர்க்கத்தனமாகக் கண்காணிப்பதாக அது கூறியது.
சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் தலைமை அதிகாரி கௌரவ் அலுவாலியா ஓட்டிச் சென்ற காரை பாகிஸ்தான்
உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் விரட்டியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பல்வேறு அரசு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளால் தனது தூதரக அதிகாரிகளுக்கு தொந்தரவு விளைவிக்கப்படுவதாக கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சிடம் இந்தியா புகார் செய்தது. இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தொந்தரவு விளைவிக்கப்பட்டதைக் காட்டும் 13 சம்பவங்களைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை இந்தியா சமர்ப்பித்தது.
இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதை பாகிஸ்தானிய அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று கூறியது. அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்குவதாக இந்தியா ஏற்கெனவே குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், தூதரக அதிகாரிகள் காணாமல் போய் இருப்பது நிலைமை மோசமடையச் செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தூதரக அதிகாரிகள் குறித்து நேற்று மாலை நிலவரப்படி பாகிஸ்தான் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

