புதுடெல்லி: நாடெங்கும் கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது. உலக அளவில் இக்கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த நோய்த்தொற்று பரவலையும் இறப்பு விகிதத்தையும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த முதல்வர்களுடன் காணொளி வழி பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடைசியாக மே 11ஆம் தேதி முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் மோடி. ஊரடங்கில் நடைபெறும் ஆறாவது சுற்று ஆலோசனையாகும் இது.
பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசித்தார்.
தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகம், குஜராத், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று புதன்கிழமை அவர் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிைடயே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை 'அறியாமையைவிட மிக ஆபத்தானது ஆணவம் என்கிற ஒரே ஒரு விஷயம்தான்' என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய கருத்தை மேற்கோள்காட்டி விமர்சித்துள்ளார்.
"தவறான பந்தயத்தில் வெற்றி பெற இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது. போதிய திறனற்ற அரசால் இப்படியொரு விஷயம் நடந்துள்ளது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதனால்தான் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் மட்டுப்படுத்தப்பட்டது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் ராகுல், ஊரடங்கு சமயங்களில் கொரோனா தொற்று எப்படி படிப்படியாக உயர்ந்தது என்றும் அதேநேரத்தில் இந்தியப் பொருளாதாரம் எப்படி படிப்படியாக சரிந்தது என்றும் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியில் விவரித்துள்ளார்.

