காத்மாண்டு: நேப்பாள நாடாளுமன்றம் நேற்று இந்தியாவின் நிலப்பகுதியை உள்ளடக்கிய வரைபடம் ஒன்றை அங்கீகரித்தது.
அதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 57 வாக்குகள் பதிவாகின. ஒரு வாக்குக் கூட மசோதாவை எதிர்க்கவில்லை.
நேப்பாளம் தன்னுடைய தேசிய சின்னத்தில் அந்தப் புதிய வரைபடத்தை இடம்பெறச் செய்து இருக்கிறது. இதனால் இந்தியாவுடனான அந்த நாட்டின் உறவு பெரிதும் பாதிப்படையும் என்று தெரிகிறது.
நேப்பாள நாடாளுமன்றத்தின் கீழவை சென்ற வாரம் அந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த அவையின் 258 உறுப்பினர்களும் ஒன்று கூடி மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தியா-நேப்பாளம் எல்லையில் உள்ள லிப்புலே, காலபாணி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளைத் தன்னுடையது என்று நேப்பாளம் உரிமை கொண்டாடுகிறது.
சீன எல்லையில் அமைந்துள்ள லிப்புலேவுக்கு செல்லும் 80 கி.மீ. சாலையை சென்ற மாதம் புதுடெல்லி திறந்தது. அதற்கு நேப்பாளம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது.

