கொரோனா கிருமித்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவுகிறது: நிபுணர்கள் மீண்டும் எச்சரிக்கை

கொரோனா கிருமித்தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவுகிறது: நிபுணர்கள் மீண்டும் எச்சரிக்கை

2 mins read
ceabb7f6-e20b-4f4f-84f0-24cc4f34a912
மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கொவிட்-19 நோய் தாக்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ (கும்பிட்டபடியே வருபவர்) ஒருவர் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்தார். படம்: ஊடகம் -

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய பரிசோதனை நடவடிக்கைகளின் மூலம் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிவதாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தொடர் பரிசோதனையில் நேர்மறை விகிதம் அதிகரிப்பு என்பது சமூகத்தில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரிப்பதன் பிரதிபலிப்பு என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் வைராலஜி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவரான ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடு முழுவதும் 64.26 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3.8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரித்துள்ளதை மத்திய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 1.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நேற்று (ஜூன் 18) ஒரே நாளில் புதிதாக 13,586 பேருக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் மொத்த எண்ணிக்கை 12,573ஆக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, மகாராஷ்டிராவில் இதுவரை 5,751 பேரும், டெல்லியில் 1,969 பேரும், குஜராத்தில் 1,591 பேரும் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்