செய்திக்கொத்து (20-06-2020) இந்தியா

செய்திக்கொத்து (20-06-2020) இந்தியா

2 mins read
31b30323-75a8-47fb-801a-93922f4102c7
அமெரிக்காவின் 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஃபெக்‌ஷியஸ் டீசிசஸ்' என்ற தேசிய ஒவ்வாமை, தொற்று நோய்க் கழகம் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் பெற்ற தகவல்கள், கிலெட் சயன்சஸ் நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ரெம்டெசிவிர் மருந்து இந்தியாவில் இம்மாத இறுதியில் கிடைக்கும்

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று சிகிச்சைக்குக் கைகொடுக்கும் ரெம்டெசிவிர் மருந்து இந்தியாவில் இம்மாத இறுதியில் சந்தைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் கொவிட்-19 நோயாளிகளுக்கு இம்மருந்து அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இம்மருந்தை உற்பத்தி செய்ய ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை உலகளவில் உற்பத்தி செய்யும் கைலீட் சயின்சஸ் நிறுவனம் இந்த அனுமதியை இந்திய நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எனினும் இந்த மருந்தை சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள்ஆ கியோருக்கு அளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளா: புதிதாக 97 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக 97 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. இத்தகவலை வெளியிட்ட அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், அங்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21ஆக உள்ளது என்றார். கொவிட்-19 நோயால் இதுவரை 2,794 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் 1,358 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமும் 15 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வருகை

மும்பை: மகாராஷ்டிராவில் இருந்து ஊரடங்கின் போது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது திரும்பி வரத் தொடங்கி இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக் தெரிவித்தார். தற்போது நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர் வீதம் திரும்பி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், மகாராஷ்டிராவில் தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகள் வேகமெடுத்த பின் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித்தொற்றால் 1.20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா: ஒரே நாளில் 12 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொவிட்-19 பாதிப்பால் 12 பேர் பலியாகி உள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 106 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7,838ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 4,73,507 மாதிரிகளை வைத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. அங்கு 34,657 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் ஆட்சியமைய வாய்ப்பு

இம்பால்: மணிப்பூரில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் இபோதி சிங் நேற்று முன்தினம் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அங்கு பாஜ தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை வேறு கட்சிகளைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் திடீரென திரும்பப் பெற்றதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும் பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென கட்சியில் இருந்து விலகியதுடன் காங்கிரசில் இணைய உள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவை 60 எம்எல்ஏக்களைக் கொண்டது. தற்போது அங்கு 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்ததை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.