அமைதிக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக படைத் தளபதி தகவல்
ஹைதராபாத்: இந்திய எல்லைப் பகுதியில் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி தரும் வகையில் விமானப்படை தயாராக உள்ளதென இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார்.
இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை இரவு கடும் மோதல் நடைபெற்றது.
இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். மேலும் 76 பேர் காயமுற்றனர். இதனால் மீண்டும் எல்லையில் பதற்றம் நிலவி வருவதோடு இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன.
இதனிடையே எல்லையில் உள்ள சூழலை சமாளிக்க இந்திய போர் விமானங்களும் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமைதியை காக்க இந்தியா எப்போதும் பாடுபடும் எனவும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் செய்த தியாகம் வீண்போகாது என இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை பயிற்சிக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு நிகழ் வில் கலந்துகொண்டு பதாரியா பேசுகையில், "அமைதியைக் காக்க இந்தியா எப்போதும் பாடுபடும். கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த நமது வீரர்கள் செய்த தியாகம் ஒருபோதும் வீண்போகாது.
"சவாலான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட மகத்தான நடவடிக்கைகள், நாட்டின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன.
"எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க படைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. தற்போதைய நிலைமையில் எல்லைப் பிரச்சினை அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.

