புதுடெல்லி: எல்லைப் பகுதியில் சீன -இந்திய ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், நாட்டின் முப்படைகளின் தளபதிகளோடு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேற்று டெல்லியில் நடந்த இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் விமானப்படை, கப்பற்படைகளின் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குறிப்பாக, சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் சமாளிக்க இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எல்லையில் சீன ராணுவத்தின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி தர இந்தியப் படைகள் தயாராக உள்ளதாகவும் இக்கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சரிடம் முப்படைத் தளபதிகள் தெரிவித்ததாக ஊடகச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடியுடனும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் வெடிபொருட்களுடன் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்றை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அதை சோதனையிட்டபோது அதில் நவீன துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி ஆற்றிய உரையை சீன சமூக ஊடகமான 'வீ சாட்' நீக்கியுள்ளது. அரசு ரகசியங்களைத் தெரிவிக்கக்கூடாது, தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக்கூடாது என்பதே இந்த நடவடிக்கைக்கான காரணம் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
'கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது'
சென்னை: அண்மைய மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றார்.
அப்பள்ளத்தாக்குக்கு சீனா உரிமை கோருவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினருக்கு எந்தப் பகுதி இந்தியாவுக்கு உட்பட்டது என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.
லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் கடந்த மே மாதம் முதலே ஊடுருவ முயற்சித்ததாகவும் அதற்கு இந்திய வீரார்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அனுராக் மேலும் தெரிவித்துள்ளார்.

