புதுடெல்லி: நாட்டில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகம், பலி எண்ணிக்கையில் 4ஆம் இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் கொரோனா பாதிப்பால் 13,699 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையைப் பொறுத்தவரை 6,170 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் 2,175 பேரும் குஜராத்தில் 1,663 பேரும் நான்காவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 757 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நிலவரத்தில் 59,377 பேருடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் கிருமி பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத் துறையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"தமிழகத்தில் ேநற்று மட்டும் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 47 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐவர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 56,845ல் இருந்து 59,377ஆக அதிகரித்துள்ளது.
"தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 757 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், நேற்று 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது.
"அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 86 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வரு கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 8,92,612 சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள் ளன. நேற்று மட்டும் 31,401 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 நோயாளிகளுக்கு 'பிளாஸ்மா' சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வெளி மாநிலங்க ளில் இருந்து தமிழகத்துக்கு வருப வர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு உள் பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

