சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன; கண்காணிப்புப் பணியில் தன்னார்வலர்கள்; ஆசிரியர்கள்

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன; கண்காணிப்புப் பணியில் தன்னார்வலர்கள்; ஆசிரியர்கள்

2 mins read
a3d68272-7f4b-40f6-b6a6-fe001a031cea
மீண்டும் முழு ஊரடங்கு நடப்பில் உள்ள சென்னை நகரத்தின் சென்ட்ரல் ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடக்கும் நிலை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் 1.2 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இவ்வீடுகளில் சுமார் 800,000 பேர் வசித்து வருவதாக குறிப்பிட்டார்.

இவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தடுக்கவும் 4,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"சென்னையில் கொரோனா கிருமித்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் தற்போது தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

"லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அறிகுறிகள் காணப்படாத தொற்று உள்ளவர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்க 17,500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன," என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 90 விழுக்காடு அளவுக்கு மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் பலனாக ஊரடங்கு முடியும்போது சென்னையில் கிருமித்தொற்று பெரியளவில் குறைய வாய்ப்புள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளைக் கண்காணிக்க வார்டு அளவில் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் முறையாக வீடுவீடாகச் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனாரா என களத்துக்குச் சென்று ஆய்வு செய்யவும், அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களின் மூலம் ஏராளமான நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை 2,600 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் தினமும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த மே 8ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை மொத்தம் 44 நாட்களில் 5,418 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்